search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருக்குறுங்குடியில் சூறைக்காற்று"

    திருக்குறுங்குடியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் 500 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டிருந்த நெற்பயிர்களும் சேதமடைந்துள்ளது. #Rain
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி சுற்று வட்டார பகுதியின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். இங்குள்ள மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். தற்போதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழை, நெல் பயிர் செய்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பகல் நேரங்களில் வெயில் கொளுத்துவதும், மாலை நேரங்களில் மழை பெய்வதுமாக இருந்து வருகிறது. இதனிடையே நேற்று இரவில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. மழையின் போது பயங்கர சூறை காற்றும் வீசியது. சுழன்று வீசிய காற்றினால் திருக்குறுங்குடி பெரியகுளம் பத்துக்காடு, மலையடிபுதூர், ராஜபுதூர் மற்றும் சுற்றுபுறப்பகுதிகளில் பயிர் செய்யப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்து நாசமானது.

    நாசமான வாழைகள் 6 மாத வாழைகள் ஆகும். ஏத்தன், வகைகளை சேர்ந்தவைகள் ஆகும். உரிய நேரத்தில் உரமிட்டும், தண்ணீர் பாய்த்தும் பாதுகாத்து வந்த வாழைகள் குலை தள்ளும் நிலையில் காற்றினால் சாய்ந்து நாசமானதை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். விளைநிலங்களில் எங்கு பார்த்தாலும் வாழைகள் சாய்ந்து கிடப்பதையே காண முடிகிறது. இதனால் விவசாயிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இதுபோல மழையினால் 500 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டிருந்த நெற்பயிர்களும் சேதமடைந்துள்ளது. இவைகள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் ஆகும். விவசாயிகள் வங்கிகளில் கடன் வாங்கியும், தங்க நகைகளை அடகு வைத்தும் விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் காற்று மழையினால் நெற்பயிர்கள், வாழைகள் நாசமானதால் அவர்களால் கடன்களை திரும்ப செலுத்த முடியாத நிலையும், நகைகளை மீட்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

    எனவே அரசு விவசாய கடன் மற்றும் தங்க நகைகடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நாசமான வாழைகளுக்கு ஒரு வாழைக்கு ரூ. 100 வீதம் இழப்பீடு என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  #Rain
    ×